கலி கண்ணன்
ஊத்தங்கரை அருகே பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
ஊத்தங்கரை அருகே பா.ஜ.க. பிரமுகர் வெட்டி படுகொலை
- ஊத்தங்கரை அருகே நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஏரிக்கரையில் விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கலி கண்ணன் கிடந்தார்.
- கொலை தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.
மத்தூர், நவ.24-
திருப்பத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் கலிகண்ணன் (வயது 52).
திருப்பத்தூர் நகர பா.ஜ.க செயலாளரான இவர் தண்ணீர் கேன் சப்ளை மற்றும் ரியல் எஸ்டேட் பைனான்ஸ் போன்ற தொழில்களை செய்து வந்தார். இவர் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள வெப்பாலம் பட்டி வேலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஏரிக்கரையில் விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.அவரது கழுத்தில் பலத்த வெட்டு காயம் இருந்தது.
இதனைக் கண்ட பொதுமக்கள் ஊத்தங்கரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி. அமலா அட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்டு கிடந்த கலிகண்ணன் அரைக்கால் டவுசர் மற்றும் சிவப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவரது கழுத்தில் மட்டும் வெட்டுக்காயம் இருந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊத்தங்கரை மற்றும் திருப்பத்தூர் டவுன் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும் தகவல் அறிந்த கலிகண்ணனின் குடும்பத்தினர் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பா.ஜ.க கட்சியினரும் ஆஸ்பத்திரியில் திரண்டனர்.இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கொலை தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.
கலி கண்ணன் பிணமாக கிடந்த இடத்தில் அதிக ரத்த கறை இல்லை. அவரை வேறு எங்காவது வைத்து கொலை செய்துவிட்டு உடலைக் கொண்டு வந்து வீசி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
திருப்பத்தூர் நகரப்பகுதி ஊத்தங்கரைக்கு அருகிலேயே உள்ளது. ஆனால் உடல் ஊத்தங்கரையை கடந்து 8 கிலோமீட்டர் தொலைவில் வீசப்பட்டுள்ளது. இதனால் கொலை ஊத்தங்கரை பகுதியில் நடந்திருக்கலாம் என்பதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
திருப்பத்தூரில் கலிகண்ணன் வீடு அமைந்துள்ள அண்ணா நகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலை தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
நேற்று இரவு திருப்பத்தூர் செட்டி தெரு பகுதியில் கலிகண்ணன் நின்று கொண்டிருந்தார்.அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் அவரை அழைத்துச் சென்றதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அவரை கடத்திச் சென்று கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் டவுன் மற்றும் ஊத்தங்கரை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கலிகண்ணன் கடந்த 6 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் நகர செயலாளராக இருந்துள்ளார். இவர் பொது கூட்டங்களில் பேசியதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் அவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக பா.ஜ.க.வினர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலி கண்ணனுக்கு போனில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது தொழில் சம்பந்தமாக அவருக்கு முன் விரோதம் இருந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.