மத்தூர் அருகே ரேஷன் அரிசி கடத்தி பிடிப்பட்ட லாரி,கைது செய்யப்பட்ட டிரைவர் சரத்குமார்.
மத்தூர் அருகே 10 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்
- வட்டாட்சியர் இளங்கோ வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
- 150-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
மத்தூர்,
கண்டெய்னர் லாரிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ரோந்து பணியில் ஈடுபட்ட வட்டாட்சியர் இளங்கோ வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்பொழுது மத்தூர் அருகே உள்ள பெரிய ஜோகிபட்டி பிரிவு சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் வேகமாகச் சென்றது. அதனை பறக்கும் படை வட்டாட்சியர் இளங்கோ துரத்தி பிடித்து விசாரணை நடத்தியதில் வண்டியை ஓட்டி வந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த சின்ன கொத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவரது மகன் சரத்குமார் (வயது 25 ) என தெரியவந்தது. மேலும் இவர் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து போச்சம்பள்ளி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார். மேலும் ரேஷன் அரிசி கடலில் ஈடுபட்ட சரத்குமார் என்ற நபரை கைது செய்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.