கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சிதம்பரம் அருகே 4 கோவில்களில் துணிகர கொள்ளை
கடலூர்:
சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில்போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலப்பாக்கதுறை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று வழக்கம்போல் விற்பனை முடிந்து இரவு 10 மணி அளவில் அங்கு பணியாற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்ட சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து திரண்டு வந்தனர்.
ஆட்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். இந்த கொள்ளை முயற்சியில் அருகில் இருந்தவர்கள் உடனே வந்ததால் அங்கு திருட முடியாமல் ஏமாற்றுத்துடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.இது குறித்த தகவல் அறிந்த சேத்தியாதோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தார். மேலும் காட்டுமன்னார்கோவில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காமிரா மூலம் கொள்ளையர்களை பிடிக்க துப்பு துலக்கி வருகின்றனர்.
மேலும் அதே பகுதியான சண்டன் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று இரவு நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்த லேப்டாப் மற்றும் உதிரிபாகங்களையும் திருடி சென்றனர்.
மேலும் அதே பகுதியில் சுற்றி உள்ள 4 கோவில்களிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த 4 கோவில்களில் உள்ள உண்டி யலின் பூட்டை உடைத்து 30,000 பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் காட்டு மன்னார்கோவில் போலீ சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடுகின்றனர். ஒரே நாளில் டாஸ்மாக் பள்ளிக்கூடம் 4 கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.