உள்ளூர் செய்திகள்

பர்கூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே வங்கியில் விடிய, விடிய அலாரம் ஒலித்தும் கண்டுகொள்ளாத போலீசார்

Published On 2022-08-02 15:33 IST   |   Update On 2022-08-02 15:33:00 IST
  • நேற்று இரவு 11 மணி முதல் வங்கியின் அலாரம் அடித்துக்கொண்டுள்ளது.
  • இரவு ஒலிக்க தொடங்கிய அலாரம் இன்று காலை வரை ஒலித்துக்கொண்டிருந்தும் ஒரு போலீஸ் கூட அந்த பக்கம் வந்து எட்டிப்பார்க்கவில்லை.

மத்தூர்,

கிரிஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அரசுடைமை வங்கி ஒன்று உள்ளது. இங்கு பர்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் வரவு,செலவு செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு பெட்டக வசதியும் இந்த வங்கியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணி முதல் வங்கியின் அலாரம் அடித்துக்கொண்டுள்ளது. இதனால் அக்கம்பக்கம் உள்ளவர்கள் வங்கியில் ஏதேனும் கொள்ளை முயற்சி போன்ற அசம்பாவிதங்கள் நடக்கிறதா என்று குவிந்தனர்.

ஆனால் அப்படி எந்தவித சம்பவமும் நடக்கவில்லை. ஒருவேளை எலியின் சேட்டையாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ அலாரம் தொடர்ந்து ஒலித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த வங்கியின் அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. ஆனால் இரவு ஒலிக்க தொடங்கிய அலாரம் இன்று காலை வரை ஒலித்துக்கொண்டிருந்தும் ஒரு போலீஸ் கூட அந்த பக்கம் வந்து எட்டிப்பார்க்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வந்து வங்கியை திறந்த பிறகுதான் அலாரம் ஒலிப்பதற்கான காரணம் தெரிய வரும்.

Tags:    

Similar News