அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாட்டின நாய்களுக்கான பரிசை வழங்கிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் செந்தில் ராஜ் மற்றும் பலர் உள்ளனர்.
திருச்செந்தூரில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்
- தேசிய அளவிலான நாய்கள் நலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாய்கள் கண்காட்சி திருச் செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- விழாவில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கருத்தரங்க மலரை வெளியிட்டு சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
திருச்செந்தூர்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து நடத்திய தேசிய அளவிலான நாய்கள் நலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நாய்கள் கண்காட்சி திருச் செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கருத்தரங்க மலரை வெளியிட்டு சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கி, நாட்டின நாய்களை பாதுகாப்பதற்கான தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கி செல்ல பிராணிகள் வளர்ப்போர் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு பேசினார்.
மேலும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் துணை வேந்தர் செல்வகுமார் சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநர் மீனாட்சி சுந்தரம் வரவேற்று பேசினார்.
விழாவில் நாய்களுக்கான இலவச பரிசோதனை, வெறி நோய்க்கான தடுப்பூசி, நாட்டின நாய்களுக்கு நுண் சில்லுபொருத்துதல் போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறந்த அயலின மற்றும் நாட்டின நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் 342 செல்ல பிராணிகள் கலந்து கொண்டது.
நிகழ்ச்சியில் ஒட்டப்பி டாரம் எம்.எல்.ஏ. சண்மு கையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி, நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.