உள்ளூர் செய்திகள்

ஆசிரம குழந்தைகளுக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் பரிசு பொருட்கள் வழங்கினர்.


ஆசிரம குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நேஷனல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்

Published On 2022-10-18 09:05 GMT   |   Update On 2022-10-18 09:05 GMT
  • நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் அவ்வை ஆசிரம குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினர்.
  • மாணவ, மாணவிகளுக்கு நோட்டுக்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் சிவசைலத்தில் இயங்கி வரும் அவ்வை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினர்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, கல்லூரியின் முதல்வர் காளிதாசமுருகவேல், இயக்குநர் சண்முகவேல் மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நூலக, விடுதி ஊழியர்கள், மின் மற்றும் இயந்திரவியல் துறை, தொழில்நுட்பவி யலாளர்கள், பழைய மாணவர்கள் உள்பட கல்லூரியின் அனைத்து தரப்பினரிடமும் இருந்து தானமாக பெறப்பட்ட பொருள்களுடன் ஔவை ஆசிரமத்திற்கு சென்றனர்.

ஆசிரமத்தில், சாந்தி செவிதிறன் குறைவுடையோர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கால்பந்து விளையாட்டு, மவுன நாடகம், நடனம், யோகா, குறு நாடகம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து செவித்திறன் குறையுள்ள குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினர்.

பின்னர் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள்கள், நோட்டுக்கள், வண்ண சார்ட்-பேப்பர்கள், தேர்வு தாள்கள், கணித வாய்ப்பாடு புத்தகங்கள், குடைகள், ரெயின்கோட், காலணிகள், துண்டு, பாய், வளையல், பொட்டு உள்ளிட்ட பல்வேறு அழகு சாதன பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் கூடைப்பந்துகள், ரிங் பால், ஸ்கிப்பிங் கயறுகள், கைப்பந்துகள், சதுரங்க அட்டைகள், கால்பந்துகள், டென்னிஸ் பந்துகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், உணவு பண்டங்கள், புத்தாடைகள் ஆகியவற்றை சிவசைலம் ஔவை ஆசிரமத்தின் துணை நிறுவனர் பாலமுருகனிடம் ஒப்படைத்து தீபாவளியை கொண்டாடினர்.

ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாசலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர், முதல்வர் ஆகியோர் வழிகாட்டுதலில் பேரில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News