பொள்ளாச்சி அருகே மாயமான யோகா மாஸ்டர் ஆழியார் அணையில் பிணமாக மீட்பு
- ஆழியார் அணையில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- ஆழியார் போலீசார் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை பொள்ளாச்சி அடுத்த ஆழியார் தென்றல் நகரை சேர்ந்தவர் விஷ்வநாதன்.
இவர் அந்த பகுதியில் பாபாஜி கிரியா என்ற யோகா மையத்தை நடத்தி பலருக்கும் யோகா கற்று தந்து வந்தார்.இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் விஷ்வநாதன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதையடுத்து அவரை உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து உறவினர்கள், ஆழியார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான விஷ்வநாதனை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆழியார் அணையில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அணைக்கு சென்று உடலை மீட்டு பார்த்த போது, அது மாயமான விஷ்வநாதன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த விஷ்வநாதனுக்கு, நீச்சல் தெரியாது என்பதால், அணையில் இறங்கிய போது, அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.