மாயமான இளம்பெண் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு- உறவினரிடம் விசாரணை
- வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசக்தியை தீவிரமாக தேடி வந்தனர்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே குட்டிகரடு பகுதியை சேர்ந்தவர் நெசவு தொழிலாளி முருகன் (வயது 35). இவரது மனைவி சிவசக்தி (31). இந்த தம்பதிக்கு சரிமளா (10), அனிஷா (7), நிஷாந்த் (2) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி விடியற்காலையில் வீட்டில் இருந்து சிவசக்தி திடீரென மாயமானார். இதையடுத்து கணவர் முருகன் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசக்தியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு முருகன் வீட்டிற்கு அருகே உள்ள அவரது உறவினர் ராஜி என்பவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் சிவசக்தி நீரில் மூழ்கி பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தண்ணீர் தொட்டியில் கிடந்த சிவசக்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிவசக்தி எதற்காக அங்கு வந்தார்? எவ்வாறு தண்ணீரில் மூழ்கி இறந்தார்? என்பது குறித்து உறவினர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.