உள்ளூர் செய்திகள்

சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன்

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு

Published On 2022-09-16 09:58 GMT   |   Update On 2022-09-16 09:58 GMT
  • முத்துகுமரனை அவர் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
  • சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று குவைத்தில் நடந்தது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது30). பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். காய்கறி வியாபாரம் செய்து வந்த முத்துக்குமரனுக்கு போதிய வருமானம் கிடைக்காததால் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கி ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மூலம் குவைத்துக்கு கடந்த 4-ந்தேதி சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 7-ந்தேதிக்குப்பிறகு முத்துக்குமரனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். இதற்கிடையே கடந்த 9-ந்தேதி குவைத்தில் முத்துகுமரன் இறந்து விட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் கலங்கி போனார்கள்.

குவைத்துக்கு சென்ற முத்துகுமரன் அங்குள்ள சபா அல்அகமது சிட்டி என்ற பகுதியில் ஒருவரிடம் பணிக்கு சேர்த்து விடப்பட்டதும், முத்துகுமரனை அவர் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒட்டகம் மேய்க்க மறுத்த முத்துகுமரனுக்கும், அவரது முதலாளிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் முத்துகுமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்ததை அறிந்த குவைத் முதலாளி் அவரை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

இந்த நிலையில் குவைத்தில் முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குவைத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன், ஆந்திராவை சேர்ந்த ஏஜெண்டு மோகனா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று குவைத்தில் நடந்தது. இதில் குவைத்தில் உள்ள தமிழர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் முத்துக்குமரன் உடல் விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சொந்த ஊரில் இன்று இறுதி சடங்கு அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு முத்துக்குமரனின் உடல் வந்து சேருகிறது.

அதன் பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் முத்துக்குமரனின் உடல் கூத்தாநல்லூருக்கு கொண்டு வரப்பட்டு மாலை 6 மணிக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு இறுதி ஊர்வலம் நடக்கிறது. பின்னர் முத்துக்குமரனின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

முத்துக்குமரனின் உடலை கூத்தாநல்லூருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம், முத்துக்குமரன் மனைவி வித்யா மனு கொடுத்தார். இதனையடுத்து கலெக்டர் விரைவான நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து முத்துக்குமரனின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.

இதற்காக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் சமூக நல அமைப்புகளுக்கு முத்துக்குமரன் மனைவி வித்யா மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News