உள்ளூர் செய்திகள்

வாகனத்தை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம்

Published On 2023-01-04 09:23 GMT   |   Update On 2023-01-04 09:23 GMT
  • சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் தொடங்கி வைத்தார்.
  • அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து வாகனத்தில் பெருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரோ கருவியை பார்வையிட்டார்.

இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளால் உயரம், உடல் எடை, இரத்த அழுத்தம், சளி பரிசோதனை, அதிநவீன பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்திற்கு இரண்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

2 மாத காலத்திற்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மாநகராட்சிப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்றும் வகையில் காசநோய் ஒழிப்பில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தான் நகர்ப்புற பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கருவி மூலம் காசநோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இந்த வாகனத்தில் 5 சமூக பணியாளர்கள் பணிபுரிவார்கள். எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காசநோய் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கு மருத்துவ பெட்டகத்தையும் மேயர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந், கவுன்சிலர் மஞ்சுளா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News