உள்ளூர் செய்திகள்

சூதாட்ட தடை மசோதாவை படுக்கைக்கு அடியில் கவர்னர் வைத்திருக்க முடியாது- அமைச்சர் ஆவேசம்

Published On 2023-03-26 10:38 GMT   |   Update On 2023-03-26 10:38 GMT
  • ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக யாரும் கருதவில்லை.
  • ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் இந்தமுறை ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும்.

வேலூர்:

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். வேலூர் கதிர் ஆனந்த் எம்.பி, மாநகர செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

கூட்டத்தில், முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, அடுத்த லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள முதலமைச்சர் அறிவித்தவாறு வாக்காளர் பட்டியலின்படி பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் தயாரிப்பது, கட்சியில் மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை இணைப்பது, ஈரோடு இடைத்தேர்தலில் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பூத்களில் அதிக ஓட்டுகளை சேர்த்த தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கும் பாராட்டு தெரிவிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக யாரும் கருதவில்லை. அவகாசத்தின் அடிப்படையில் மேல்முறையீட்டுக்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. கோர்ட் கதவு திறக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அவர் அதை பயன்படுத்தும் முன்பாகவே அவசரமாக தண்டனை வழங்கியிருப்பது ஜனநாய கருத்துக்கு உகந்ததல்ல.

ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டை மெஜாரிட்டியுடன் ஆளும் ஒரு கட்சி தனிமனிதனை கண்டு அஞ்சுகிறதோ என்ற எண்ணம் அரசியல் நோக்கர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எல்லா தலைவர்களுமே இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் இந்தமுறை ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். இனி, அதை படுக்கைக்கு அடியிலேயே அவர் வைத்திருக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News