உள்ளூர் செய்திகள்

பால் வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி செயின் பறிப்பு- வாலிபர்கள் சிறையில் அடைப்பு

Published On 2023-06-09 12:01 IST   |   Update On 2023-06-09 12:01:00 IST
  • காயமடைந்த வியாபாரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
  • குற்றவாளிகளை கைது செய்து தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கண்ணூர் கிராமம்,பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(வயது29) ஆவார். இவர் தண்டலச்சேரி பகுதியில் பால் டெப்போ ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் ஆரணி பஜார் வீதியில் உள்ள அம்மன் கோவில் அருகே கொரியர் சர்வீஸ் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்பொழுது அவருக்கு எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் உதயகுமாரை வழிமறித்தனர்.

பின்னர்,அவரது கழுத்தில் இருந்த 12 கிராம் தங்கச் செயினை பறிக்க முயன்றனர். இதனை தடுத்த உதயகுமாரை கத்தி முனையில் மிரட்டி சரமாரியாக தாக்கினர். பின்னர்,அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர்,இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து பால் வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி தங்கச்செயினை பறித்துச் சென்ற ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர்களான தமிழ் (எ) தமிழரசன்(வயது25), கார்த்திக்(வயது23) ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின்படி தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் தமிழ் (எ) தமிழரசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர்,போலீசார் குற்றவாளிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் பால் வியாபாரியிடம் வாலிபர்கள் இரண்டு பேர் கத்தி முனையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News