388 நாட்களுக்கு பின்னர் 100 அடிக்கு கீழ் சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்
- மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று வரை தொடர்ந்து 338 நாட்களாக 100 அடிக்கு மேலாக நீடித்தது.
- கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
சேலம்:
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த நீர்பாசன ஆண்டு பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனை அடுத்து 2022-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி, மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. பின்னர், அணை முழுவதும் நிரம்பி உபரி நீர்திறக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாகவும், நீர்வளத்துறை அதிகாரிகளின் நீர் மேலாண்மை காரணமாகவும், மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று வரை தொடர்ந்து 338 நாட்களாக 100 அடிக்கு மேலாக நீடித்தது.
இதற்கு முன்பு 2005-2006-ம் ஆண்டு, மேட்டூர் அணை நீர்மட்டம் 428 நாட்கள் தொடர்ந்து 100 அடியாக நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 651 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 100.93 இருந்தது. இது வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை 100.29 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் இன்று பிற்பகலில் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் கீழாக குறைந்தது. தொடர்ந்து மழை பெய்தால் நீர்மட்டம் உயரும். இல்லாத பட்சத்தில் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.