உள்ளூர் செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.

மாண்டஸ் புயல்: நாகை-சீர்காழி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

Published On 2022-12-07 09:27 GMT   |   Update On 2022-12-07 09:27 GMT
  • 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று திருமுல்லைவாசல், பூம்புகார் பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் 16 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக வங்க கடலில் உருவாகும் தொடர் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளதால், நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் கல்லார் செருதூர் நாகூர் நம்பியார்நகர் சாமந்தான்–குட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News