உள்ளூர் செய்திகள்

2 கைகளை இழந்தவர்: 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாணவர்

Published On 2023-05-20 15:31 IST   |   Update On 2023-05-20 15:31:00 IST
  • 4 வயதில் மின்சாரம் தாக்கியதில், 2 கைகளையும் இழந்தவர்.
  • இந்த மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்த பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதி. இவர்களது மகன் கீர்த்திவர்மா (வயது 15). 4 வயதில் மின்சாரம் தாக்கியதில், 2 கைகளையும் இழந்தவர். இவர் கிருஷ்ணகிரி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கீர்த்திவர்மா தமிழில் 82, ஆங்கிலத்தில் 79, கணிதத்தில் 93, அறிவியலில் 87, சமூக அறிவியலில் 96 மதிப்பெண்கள் என மொத்தம் 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

மாணவரை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள். இது குறித்து மாணவன் கீர்த்திவர்மா கூறியதாவது:-

நடந்துமுடிந்த தேர்வில் நான் 437 மதிப்பெண் பெற்றுள்ளேன். இந்த மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்த பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 மாணவரின் தாய் கஸ்தூரி கூறியதாவது:-

4 வயதில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்கம்பியில் கைகள் பட்டு மின்சாரம் தாக்கியதில் கீர்த்திவர்மா 2 கைகளையும் இழந்தான். எனது கணவரும் விட்டு சென்ற நிலையில், நான் ஆதரவு இன்றி எனது சொந்த ஊரான ஜீனூருக்கு வந்து கூலி வேலை செய்தேன்.

2 கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் எனது மகன் படித்து நடந்து முடிந்த 10&ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளான். படிப்புடன், ஓவியம் வரைவதிலும் எனது மகன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளான்.

எனது மகனுக்கு 18 வயது பூர்த்தி ஆன பிறகு தான் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பல்வேறு மருத்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் எனது மகனுக்கு கைகள் பொருத்திட முதல்&அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 இது குறித்து தகவல் அறிந்ததும் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது முதல அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் உதவி கேட்டுள்ளீர்கள். அதை அரசின் சார்பில் செய்து தருகிறேன். மாவட்ட கலெக்டரை நேரில் அனுப்புகிறேன். தைரியமாக இருங்கள். உடல் நலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தேவையான உதவிகளை அரசின் சார்பில் நிறைவேற்றி தருவேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News