ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
- செல்வராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் தருமபுரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
- செல்வராஜ் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
தருமபுரி,
குடிமை பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் ரேஷன் அரிசி கடத்துபவர் மீது கள்ள சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டதின் பேரில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் காரிமங்கலம் அகரம் சாலை அருகே வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியில் 4.7 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி சிக்கியது. இந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தருமபுரி சோளக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூரைச் சேர்ந்த முருகன், காரிமங்கலம் அருகே உள்ள கும்பர அள்ளியை சேர்ந்த சம்பத்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது செல்வராஜ் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் தருமபுரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
இந்த பரிந்துரையை ஏற்று செல்வராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.
இதையடுத்து செல்வராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்க பட்டார்.