உள்ளூர் செய்திகள்

பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாலம் கட்டும் பணிகளால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-09-22 05:59 GMT   |   Update On 2022-09-22 05:59 GMT
  • அலங்காநல்லூரில் பாலம் கட்டும் பணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்து.
  • இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர், பஸ் நிலையத்திலிருந்து கேட்டுக்கடை செல்லும் சாலையில் முனியாண்டி கோவில் முன்பு மழைநீர், கழிவுநீர் செல்வதற்கான பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

அலங்காநல்லூர் பகுதியில் மழைக்காலங்க ளில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அங்கு பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது மழை நீர் தேங்காமல் செல்வதற்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அலங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு வரும் அரசு பஸ்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறைக்கப்பட்டது.

பஸ் நிலையத்தை தாண்டி செல்லும் ஓரிரு அரசு பஸ்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது. மேலும் பால வேலைகள் நடைபெறுவதால் அவ்வப்போது அந்த இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகளும், அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கிராமப்புற பகுதியிலிருந்து வரும் அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் கேட்டுக்கடை வழியாக மதுரை செல்வதால் பயணிகள் கேட்டுக்கடையில் இருந்து அலங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு நடந்தே செல்கின்றனர்.

அரசு மருத்துவமனை இந்த வழித்தடத்தில் உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

பால வேலையும் தாமதமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News