- மதுரை அருகே சாலையை கடக்க முயன்றவர் பலியானார்.
- எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சோழவந்தான்அருகே உள்ள கண்ணுடையாள் புரத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் சிபிராஜ் (வயது 19). இவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சமயநல்லூர் அருகே டபேதார் சந்தை முன்பு சாலையை கடக்க முயன்ற சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (59) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிபிராஜ் படுகாயம் அடைந்தார்.
அப்போது கோவையில் இருந்து மதுரை நோக்கி மினிலாரி வந்தது. அதை உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி (40) ஓட்டி வந்தார். அந்த லாரி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் பாண்டி தலைமையில் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் மினிலாரி மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக சேதமடைந்தது. அடுத்தடுத்து நடந்த விபத்து சம்பந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.