உள்ளூர் செய்திகள்

சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2023-02-04 07:12 GMT   |   Update On 2023-02-04 07:12 GMT
  • திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழா முன்னிட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியர்-தெய்வானையை தரிசித்தனர். பால்குடம், காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இன்று இரவு தந்தத்தொட்டி சப்பரத்தில் தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமியும், சிம்மாசனத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியும் திருவீதி உலா வருகின்றனர். தைப்பூசத்திருநாள் அன்று மட்டும் திருப்பரங்குன்றம் கோவிலில் இரண்டு முருகன், இரண்டு தெய்வானை திருவீதி உலாவருவது வழக்கமாகும்.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் காலையில் கணபதி ஹோமம், புண்ணியவாசனம் நடைபெற்று மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அழகர்மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோவிலிலும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.=

Tags:    

Similar News