விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு
- விவசாயி வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
- ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் பின்னால் வந்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள நாகையாபுரத்தை சேர்ந்தவர் ஜெயசந்திரன்(65), விவசாயி. இவரது மனைவி கலாவதி. இவர்கள் சிப்பிரெட்டி பட்டியில் வசித்து வருகின்றனர். இவர்களது 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. சம்பவத்தன்று இருவரும் வெளியூர் சென்றிருந்தனர்.
அப்போது அருகில் வசிப்பவர்கள் வீட்டின் முன்கதவு திறந்து கிடப்பதாக செல்போனில் ஜெயசந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 5½ பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து பணம்-நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஜெயசந்திரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம்-செல்போன் பறிப்பு
திருமங்கலம் அருகே உள்ள காண்டை கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் இளையராஜா (வயது27). கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத் தன்று இரவு பணிக்காக பஸ்சில் சென்றார். பஸ் நிறுத்தத்தில் இறங்கி மில்லிற்கு நடந்து சென்றார். அங்குள்ள வங்கியின் அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் பின்னால் வந்தனர்.
அவர்கள் திடீரென இளைய ராஜாவை வழிமறித்தனர்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.14 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் இளையராஜா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.