புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
ஓ.பன்னீர்செல்வம் கூட்டியது தி.மு.க. பினாமி மாநாடு; ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
- ஓ.பன்னீர்செல்வம் கூட்டியது தி.மு.க. பினாமி மாநாடு என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
- தி.மு.க. கடந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடி மங்கலத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
1½ கோடி தொண்டர்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மறுவடிவமாக திகழ்கிறார். நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் சுயநலத்துடன் இந்த இயக்கத்தை அடமானம் வைக்க துடிக்கின்றனர்.அதற்கு சாவுமணி அடிக்கும் வகையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையமும் எடப்பாடியார் பொதுச் செயலாளர் ஆனது செல்லும் என்று தீர்ப்பு வந்த பிறகும் கூட அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி திருச்சியில் மாநாட்டை நடத்தினார்கள். எதற்காக இந்த மாநாடு?. அ.தி.மு.க.வில் எந்த தொண்டனும் தி.மு.க. என்பது தீய சக்தி என்று தான் கூறுவார்கள். தி.மு.க.வின் அவலங்களை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்கு தோல்உரித்து காட்டினர்.
அ.தி.மு.க.வின் உடம்பில் ஓடும் உண்மையான ரத்தம் என்றால் தி.மு.க.வை தோல்உரித்து காட்டுவது தான். அதுதான் அ.தி.மு.க.வின் இலக்கணமாகும். ஆனால் அ.தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு மருந்திற்கு கூட தி.மு.க. அரசை விமர்சிக்காமல் திருச்சியில் மாநாட்டை சிலர் நடத்தினர்.
51 ஆண்டுகால அ.தி.மு.க. வரலாற்றில் இதுபோல் நடந்தது கிடையாது. இவர்களது உண்மையான சுயரூபம் தெரிந்து விட்டது.கடந்த 2 ஆண்டுகளில் அம்மா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. அதைப்பற்றி வாய் கூட திறக்கவில்லை. தி.மு.க.வின் கைக்கூலியாக மாறிவிட்டனர்.
அங்கே தி.மு.க. பிரதிநிதி போல வந்து கலந்து கொண்டனர். தி.மு.க. பினாமி மாநாடு போல் திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. ரூ.25 கோடியை செலவழித்து ஒரு மாநாட்டை நடத்தினார்கள். அந்த மாநாட்டில் எடப்பாடி யாரை கடுமையாக வசைப்பாடி உள்ளனர். யார் தூண்டுதலால் நடத்தினர் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது.
வருகிற ஆகஸ்ட் 20 -ந்தேதி மதுரையில் நடை பெறும் மாநாட்டை நாடே திரும்பி பார்க்கும் வகையில் எடப்பாடியார் நடத்தி காண்பிப்பார். தி.மு.க. கடந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை.ஆனால் தற்போது ரூ.31ஆயிரம் கோடி வரை ஊழல் செய்து சம்பாதித்து விட்டனர். இதை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை என்று நிதி அமைச்சர் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து விட்டார். இதற்கு உண்மையான விசாரணை செய்ய வேண்டும் என்று எடப்பாடியார் கூறி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.