ஊராட்சித் தலைவர் மீது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவே பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது- நீதிபதிகள் கருத்து
- அரசியல்வாதியின் ஆக்கிரமிப்பையும் அகற்றப்பட்டு வந்தன.
- அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெரிகிறது.
மதுரை:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் உள்ள விழுந்தமாவடியின் ஊராட்சித் தலைவர் மகாலிங்கம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 12-ந்தேதி நானும், என்னுடைய மகனும், விழுந்தமாவடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான அலெக்ஸ் ஆகிய இருவரும் 2.25 கிலோ கஞ்சா பதுக்கியதாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். என் மகனை தேடி வருகின்றனர்.
நாங்கள் சட்டவிரோதமான எந்த செயலிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக எடுக்கப்பட்டு உள்ளது. எனவே எங்கள் மீதான பொய் வழக்கில் சிறையில் அடைத்துள்ளதால் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அபுடு குமார் ராஜரத்தினம், ஜான்சன் யுவராஜ் ஆகியோர் ஆஜராகி, மனுதாரர் ஊராட்சித்தலைவர் என்பதால், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதில் அரசியல்வாதியின் ஆக்கிரமிப்பையும் அகற்றப்பட்டு வந்தன.
இதனால் ஆத்திரம் அடைந்த சிலர், போலீசார் மூலமாக மனுதாரர், அவரது மகன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்ய வைத்து, பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே மனுதாரர் சென்னையில் போதைப்பொருள் பதுக்கியதாக பதிவான வழக்கில் 5 நாளில் ஜாமீன் வழங்ப்பட்டது. அதைப் போல இந்த வழக்கிலும் அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என வாதாடினார்கள்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர், அவரது மகன் ஆகியோர் கடந்த ஆண்டு சென்னை ராயபுரத்தில் 500 கிராம் மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக கைதானார்கள். அவர்கள் மீதான வழக்கு பொய்யானது என்றும், அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்றும் போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
ஊராட்சி தலைவரான மனுதாரரும், ஒன்றிய கவுன்சிலரான அவரது மகனும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து இல்லாமல், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெரிகிறது.
இவர்கள் சுயேட்சைகள் என்பதால் அவர்கள் மீது அரசு தரப்பில் ஏற்கனவே 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதையும், இதே வழக்கில் மனுதாரர் மகனுக்கு முன்ஜாமீன் வழங்கியதையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.