உள்ளூர் செய்திகள்

சென்னையை கலக்கும் 'லியோ' விநாயகர்

Published On 2023-09-16 11:53 IST   |   Update On 2023-09-16 11:53:00 IST
  • படங்களின் கதாபாத்திரங்களைப் போன்ற விநாயகர் சிலைகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்து பார்ப்போரை கவர்ந்தது.
  • 25 நாட்களாக, 5 கலைஞர்களைக் கொண்டு இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள்(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

விநாயகர் சிலைகளை சிலர் புதுமையாக ஒவ்வொரு ஆண்டும் டிரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களை வைத்து வடிவமைப்பார்கள். அதன்படி புஷ்பா, பாகுபலி போன்ற திரைப்படங்கள் வெளியான சமயத்தில் அப்படங்களின் கதாபாத்திரங்களைப் போன்ற விநாயகர் சிலைகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்து பார்ப்போரை கவர்ந்தது.

அந்த வகையில் இந்த ஆண்டு சென்னையில் 2 விநாயகர் சிலைகள் காண்போரை கவர்ந்து வருகிறது. சென்னை கொருக்குபேட்டையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளால் உருவாக்கப்பட்டு வரும் இந்த சிலைகள் லியோ திரைப்பட அறிவிப்பின்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்று ஒரு பக்கம் விநாயகரும், மறுபக்கம் சிங்கமும் இருக்கும் வகையில் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சிலை, லியோ திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு வீடியோவில் நடிகர் விஜய் 'பிளட்டி சுவீட்' என்று கூறும் காட்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை பொதுமக்களை கவர்ந்து வருகிறது.

இந்த லியோ விநாயகர் சிலை 8 அடி உயரம் கொண்டது. இதை தயார் செய்ய ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர். 25 நாட்களாக, 5 கலைஞர்களைக் கொண்டு இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் 'லியோ' படத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் சென்னையை மட்டுமல்ல இணையத்தையும் கலக்கி வருகிறது.

Tags:    

Similar News