உள்ளூர் செய்திகள்

போலி ஆவணங்கள் தயார் செய்து நிலம் பத்திரப்பதிவு- ஒருவர் கைது

Published On 2022-08-29 10:16 GMT   |   Update On 2022-08-29 10:16 GMT
  • போலியாக ஆவணங்கள் தயார் செய்து கடந்த ஜூன் மாதம் பேராவூரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்துள்ளனர்.
  • வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தபோது போலியான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது தெரியவந்தது.

திருச்சிற்றம்பலம்:

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது49).

இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் சொந்தமான இடம் களத்தூர் கிராமத்தில் உள்ளது.

இதனை அவர்கள் யாரும் இதுவரை பாகப்பிரிவினை செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (50) என்பவரிடம், குழந்தைசாமி தன்னிச்சையாக விலை பேசி, பணி ஓய்வு பெற்ற முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் மூலமாக போலியாக ஆவணங்கள் தயார் செய்து கடந்த ஜூன் மாதம் பேராவூரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்த தகவல்கள் அண்மையில் நிலத்தின் உரிமையாளர்களுக்கு தெரிய வந்தது.

தகவலின் பேரில், களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன் வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தபோது போலியான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதன் மூலம் பத்திர பதிவு நடைபெற்று இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன், திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தைசாமியை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News