உள்ளூர் செய்திகள்

ஆனந்த குளியல் போடும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை

Published On 2024-03-22 07:22 GMT   |   Update On 2024-03-22 07:22 GMT
  • தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார்.
  • பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மாசிமக தீர்த்தவாரி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கு மங்களம் என பெயர் சூட்டி உள்ளனர். இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது.

வயது அதிகமாவதை போல யானையின் சுட்டித்தனமும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு உள்ளது. இதனால் யானை தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்வதில்லை. சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகை மருந்துகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வெயில் சுட்டெரித்து வருவதால், பாகன் அசோக்குமார் தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார். அதன்படி, வழக்கம்போல் யானை மங்களம் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டது. தொட்டியில் இறங்கிய யானை மங்களம் சுமார் ஒரு மணிநேரம், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சியும், இதனை வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.

கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

மேலும், சிலர் இதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

Similar News