உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வழக்கமான சிகிச்சைகள் தொடர வேண்டும் -நோயாளிகள் வலியுறுத்தல்

Published On 2022-11-27 15:04 IST   |   Update On 2022-11-27 15:04:00 IST
  • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை நுழைவாயில் பூட்டப்பட்டு பேரிகார்டு வைக்கப்பட்டது.
  • ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி, காந்தி ரோடு சாலையில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கிருஷ்ணகிரி நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் நாள்தோறும், 500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். சர்க்கரை, ரத்த கொதிப்பு உள்ளிட்டவைகளுக்கு மாத்திரை, மருந்துகளும் இங்கேயே வழங்கப்பட்டு வந்தன.

கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் இதனால் எளிதில் வந்து சிகிச்சை பெற முடிந்தது. கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு சிகிச்சைகளாக குறைக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை நுழைவாயில் பூட்டப்பட்டு பேரிகார்டு வைக்கப்பட்டது. இனி எந்த சிகிச்சைகளாக இருந்தாலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கே செல்ல வேண்டும் என அங்கு இருந்தவர்கள் நோயாளிகளை திருப்பி அனுப்பினர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வந்தவர்கள் அனைவரும் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களாகவே இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில்லை, டாக்டர்கள் இருப்பதில்லை. ஆனாலும் நாங்கள் காத்திருந்து சிகிச்சை பெற்று வந்தோம். தற்போது போலுப்பள்ளியில் இருக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, 12 கி.லோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டும். அவசர சிகிச்சைக்கு வருபவர்களும், சி.டி.,ஸ்கேன், உள்ளிட்டவைக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கிருஷ்ணகிரி டோல்கேட் கடந்த செல்ல வேண்டிய அவலமும் ஏற்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வழக்கமாக செய்து வரும் புறநோயாளி சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றை செயல்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News