கல்வெட்டை ஆராயும் குழுவினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக பழமையான கல்வெட்டை கண்டறிந்த ஆய்வுக்குழுவினர்
- நான்கு தூண்களில் இரண்டு ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டாகும்.
- ஓசூர், முரசுநாடு என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு வெளிப்ப டுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்ட ப்பள்ளியில், பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான இடத்தில், மண்ணில் புதைந்திருந்த நான்கடி உயரமும், ஒரு அடி விட்டமும் கொண்ட நான்கு கல் தூண்கள், முன்னாள் தலைவர் ராஜா மற்றும் கிராமத்தினர் உதவியுடன் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த நான்கு தூண்களில் இரண்டு ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டாகும்.
இந்த கல்வெட்டு குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சி யர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
ஓசூருக்கு முரைசூர் நாடு என்ற பெயர் இக்கல்வெட்டில்தான் முதன்முதலாக வருகிறது. இதுவரை 13ம் நூற்றாண்டில் தான் முரசுநாடு என்ற பெயர் வந்ததாகக் கருதப்பட்டுவந்தது. ஆனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஓசூர், முரசுநாடு என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு வெளிப்ப டுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் மிக பழமையான கல்வெட்டு இதுவாகும்.மேலும் இது கோவிலுக்கு வழங்கப்பட்ட தானத்தைக் குறிக்கும் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிகப்பழமையான கோவில் மதகொண்டப்பள்ளி அர்க்கீஸ்வரர் கோவி ல் என்பதும், ஓசூர் 1020-ம் ஆண்டிலேயே முரசுநாடு என்றழைக்கப்பட்டதும் தெரியவருகிறது. எனவே இக்கல்வெட்டு வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.