கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்
- விவேகானந்தர் நினைவு மண்டபம்- திருவள்ளுவர் சிலையை 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் பார்த்தனர்
- கன்னியாகுமரியில் சூரியன் உதய மாகும் காட்சி தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
கன்னியாகுமரி :
கோடை விடுமுறை சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 14-ந் தேதி தமிழ்புத்தாண்டு விடுமுறை, அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என வந்ததால், கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குவிந்தனர்.
அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகுகளில் சென்று பார்வையிட்டனர். இதில் தமிழ் புத்தாண்டான கடந்த 14-ந்தேதி 7 ஆயிரத்து 400 பேரும், 15-ந் தேதி (சனிக்கிழமை) 8 ஆயிரத்து 600 பேரும் 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) யான நேற்று 8 ஆயிரத்து 800 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு உள்ளனர். 3 நாட்களில் 24 ஆயிரத்து 800 பேர் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது கோடை காலம் என்பதால் கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சி தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதனால் கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன்களை கட்டி உள்ளது. கன்னியாகுமரி கடலில் இன்றும் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.