உள்ளூர் செய்திகள்

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-10-16 07:18 GMT   |   Update On 2022-10-16 07:18 GMT
  • பெரும்பாலான பொதுமக்கள் தற்போது தரமற்ற அரிசி விநியோகம் செய்வதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

நாகர்கோவில்:

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் ஆகிய 6 தாலுகாக்களில் 764 ரேஷன் கடைகள் உள்ளன.

இக்கடைகள் மூலம் சுமார் 5 லட்சத்து 68 ஆயிரத்து 830 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இது தவிர அந்தியோதையா அன்ன யோஜனா குடும்ப அட்டை தாரர்கள் (ஏஏஒய்) 14 சதவீதமும், முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (பிஹெச்ஹெச்) 42 சதவீதமும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டை தாரர்கள் (என்பிஹெச்ஹெச்) 42 சதவீதமும், முன்னுரிமையற்ற சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் (என்பிஹெச்ஹெச்-எஸ்) 2 சதவீதமும் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது குமரி மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கப்பட்டு வரும் அரிசியானது சமையலுக்கு உகந்த அரிசியாக இல்லாமல் உருட்டு அரிசியாகவும், அரிசியுடன் கருப்பு அரிசி கலந்தும் தரமற்ற முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ரேஷன் கடையில் விநியோகிக்கப்படுகின்ற அரிசியின் மூலம் தங்களது வறுமையை போக்கி வந்த பெரும்பாலான பொதுமக்கள் தற்போது தரமற்ற அரிசி விநியோகம் செய்வதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகள் முன்பு போராட்டம் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக செண்பகராமன்புதூர் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதுடன் தரமற்ற அரிசி விநியோகிப்பதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட அரிசியினை இறக்க விடாமல் லாரியை முற்றுகையிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுபோன்று கடுக்கரை, சாமிதோப்பு, கொட்டாரம், தர்மபுரம், மேலகிருஷ்ணன்புதூர், மணக்குடி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அந்தந்த ரேஷன் கடைகள் முன்பு தரமான அரிசி வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியினை பொதுமக்கள் பயன்பெறும் விதத்தில் தரமானதாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News