உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்

Published On 2022-11-02 14:12 IST   |   Update On 2022-11-02 14:12:00 IST
  • பெருவிளை பகுதியில் உள்ள ரேஷன் கடை சரியாக செயல்படவில்லை. அங்கு பொது மக்களுக்கு 1½ லிட்டர் மண்எண்ணை தான் வழங்கப்படுகிறது.
  • கோட்டை விளை பகுதியில் ரோட்டில் சாக்கடை விடப்படுகிறது. அங்கு கோவில் உள்ள பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை வணிகர் தெரு பகுதியில் பகுதி சபா கூட்டம் இன்று நடந்தது.மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.

பெருவிளை பகுதியில் உள்ள ரேஷன் கடை சரியாக செயல்படவில்லை. அங்கு பொது மக்களுக்கு 1½ லிட்டர் மண்எண்ணை தான் வழங்கப்படுகிறது. மோசமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

கோட்டை விளை பகுதியில் ரோட்டில் சாக்கடை விடப்படுகிறது. அங்கு கோவில் உள்ள பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.பெருவிளை பகுதியில் வரி வசூல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகைகள் தற்பொழுது வழங்கப்படவில்லை. அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கூறினார்கள்.

இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறுகையில், பெருவிளையில் 10 நாளில் வரி வசூல் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டவிளை பகுதியில் சாக்கடைகளை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

மேலும் அந்த பகுதியில் மழை நீர் தேங்காதவாறு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கலெக்டர் அரவிந்த் கூறுகையில், பெருவிளை ரேஷன் கடையில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உதவி தொகை வழங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்பட வில்லை. ஆவணங்கள் முறையாக இருந்தால் உடனடியாக உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க ப்படும்.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வழங்க ப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்என்றார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து அதை தீர்க்க உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்கு முத்தாய்ப்பாக ஒவ்வொரு வார்டுகளிலும் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டங்கள் நடத்தி பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின் பெயரில் தற்போது இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் இந்த கூட்டங்களில் உங்களது கருத்துக்களை தெரிவிக்க லாம். அந்த கருத்துக்களின் அடிப்படையில் உங்களது கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது ரூ.5¾ லட்சம் கோடி கடன் இருந்தது. அதையும் சமாளித்து தற்பொழுது பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறார்கள். இருசக்கர வாகனங்களில் சென்று ஆய்வு செய்து தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டு உள்ளார்கள். அதற்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை மேற்கொ ண்டு வருகிறோம். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். குமரி மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

கூட்டத்தில் மண்டலத் தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், காங்கிரஸ் நிர்வாகி சிவ பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News