உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே மகனை பார்க்க அனுமதி மறுத்ததால் மனைவியை கொன்றேன் - கைதான தொழிலாளி வாக்குமூலம்

Published On 2023-02-27 07:43 GMT   |   Update On 2023-02-27 07:43 GMT
  • திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஜெயபால் (46) என்பவரை மேனகா 2-வது திருமணம் செய்து கொண்டார்
  • ஜெயபாலை இரணியல் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை

கன்னியாகுமரி :

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு ஆர்சி தெருவை சேர்ந்தவர் மேனகா (வயது 38). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ்லின் பாபு என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஜெயபால் (46) என்பவரை மேனகா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மேனகா குருந்தன்கோடு வந்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி ஜெயபால் குருந்தன்கோடு வந்துள்ளார். அப்போது ஆலயத்திற்கு சென்று வந்த மேனகாவை வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் மேனகாவுக்கு கழுத்து, நாடி, முதுகு, விரல் ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அருகில் நின்ற மகளை வெட்டியதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே ஜெயபால் தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மேனகா சிகிச்சை பல னின்றி கடந்த 24-ந் தேதி உயிரிழந்தார். சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த இரணியல் போலீசார் தலை மறைவான ஜெயபாலை தேடி வந்தனர். இதனிடையே திக்கனங்கோடு பகுதியில் பதுங்கி இருந்த ஜெயபாலை இரணியல் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தனது வாக்குமூலத்தில் ஜெயபால் கூறியிருப்பதாவது:- கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மேனகாவை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேனகா பிரிந்து குருந்தன்கோடு வந்துவிட்டார். நானும் குருந்தன்கோட்டில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து ஓட்டல் தொழில் செய்து வந்தேன். வாரத்திற்கு ஒரு முறை எனது மகனை பார்க்க மேனகா வீட்டிற்கு செல்வேன். கடந்த ஒரு சில வாரமாக எனது மகனை பார்க்க மேனகா அனுமதிக்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்தேன்.

இந்த நிலையில் தான் கடந்த 19-ந் தேதி ஆலன்விளை ஆலயத்திற்கு சென்று வந்த மேனகாவை தடுத்து நிறுத்தி மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினேன். ஆத்திரம் அடங்காமல் அருகில் நின்ற மகளையும் தலை யில் வெட்டினேன். இருவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதனால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். ஆனால் எனது மனைவி சிகிச்சை பலனின்றி இறந்ததை அறிந்ததும் மிகவும் வேதனை அடைந்தேன். போலீசுக்கு பயந்து திக்கனங்கோடு சென்று விட்டேன். அங்கு நான் ஒளிந்து இருந்த போது போலீசில் சிக்கிக் கொண்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News