உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை

Published On 2023-11-02 13:11 IST   |   Update On 2023-11-02 13:11:00 IST
  • மேயர் மகேஷ் உறுதி
  • ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தளம் ஆகிய வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று மேயர் மகேஷ் தலைமையில் நடந்தது.. ஆணையர் ஆனந்த் மோகன், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

மனுக்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் மேயர் மகேஷ் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மழை பெய்து வருவதால் ஆங்காங்கே சாக்கடை கால்வாய் நிரம்பி மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் செல்கிறது. இதை தடுக்கும் வகையில் சாக்கடை கால்வாயில் உள்ள மண்ணை அகற்றும் பணி நடக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. எனினும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தினமும் 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன.

முக்கடல் அணையில் தண்ணீர் இல்லாமல் போனதால் புத்தன் அணையில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது முக்கடல் அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து முக்கடல் தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு புத்தன் அணையில் இருந்து வரும் தண்ணீரும் வழங்கப்படுகிறது. எனவே நாகர்கோவில் மாநகர மக்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக 3-வது வார்டு அந்தோணியார் தெருவில் ரூ.3.10 லட்சத்தில் கான்கிரீட் தளம், 34-வது வார்டு ரீட்டாஸ் தெருவில் ரூ.8 லட்சத்தில் கான்கிரீட் தளம், 43-வது வார்டு கலை நகரில் (ரேஷன் கடை அருகே) ரூ.15 லட்சத்தில் கான்கிரீட் தளம், 9-வது வார்டு விநாயகர் தெருவில் ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தளம் ஆகிய வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர் செல்வகுமார், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர்கள் அருள் சபிதா ரெக்ஸலின், தினகரன், விஜயன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News