உள்ளூர் செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே சத்துணவு ஊழியர் வீட்டில் நகை,பணம் கொள்ளை - மூதாட்டியின் கம்மலையும் பறித்து சென்றனர்

Published On 2022-07-02 08:57 GMT   |   Update On 2022-07-02 08:57 GMT
  • வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 10 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
  • நள்ளிரவு அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் லோகம்மாளின் கம்மலை பிடிங்கி சென்றனர்.

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருேக உள்ள குமரெட்டியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன்.

இவரது மனைவி மாரியம்மாள் (வயது45). இவர் எப்போதும்வென்றான் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா (74) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கடந்த மாதம் மகனை பார்க்க சென்றார். அவரது வீட்டின் பூட்டும் இன்று உடைக்கப்பட்டு கிடந்தது.

ஆனால் அவரது வீட்டில் நகை பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக பசுவந்தனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி லோகம்மாள் (60) என்பவர் காற்றுக்காக வீட்டின் வளாகத்தில் நேற்று இரவு படுத்து தூங்கினார். நள்ளிரவு அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரது கம்மலை பிடிங்கி சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

போலீசார் விசாரணையில் இதே கும்பல் தான் மற்ற 2 வீடுகளிலும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.   

Tags:    

Similar News