உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் ரம்மிக்கு தடை- மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு ஜவாஹிருல்லா வரவேற்பு

Published On 2022-06-12 12:11 IST   |   Update On 2022-06-12 12:11:00 IST
  • தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்லைன் சூதாட்ட வருமானத்தில் குறைந்தது 20 சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுவதாகவும் தெரிகிறது.

சென்னை:

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது. பலரும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய வேண்டுமென வலுவாக கோரிக்கைகளை வைத்தது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க குழு ஒன்றை அமைத்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம் ரூ.10,100 கோடி. நடப்பாண்டில் இது ரூ.15,400 கோடியாக அதிகரிக்கும் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்லைன் சூதாட்ட வருமானத்தில் குறைந்தது 20 சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுவதாகவும் தெரிகிறது.

2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 60-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். அதன்பின் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் இயற்றப்பட்டதால் 10 மாதங்கள் தற்கொலைகள் எதுவும் நிகழவில்லை.

ஆனால் நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதித்த தடை செல்லாது என்று அறிவித்ததற்குப் பிறகு தொடர்ச்சியாக 10 மாதங்களில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து இரண்டு வார காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது தமிழக மக்களின் நலனில் அக்கறைக்கொண்டு எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News