மேட்டுப்பாளையத்தில் ஐ.டி. ஊழியர் மோட்டார் சைக்கிள் திருட்டு-2 பேர் கைது
- போலீசார் ரோந்தில் ஈடுபட்ட போது 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
- 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத்(25).
இவர் கோவையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று அருண்பிரசாத் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் தூங்க சென்றார்.
மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள் இவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அருண்பிரசாத் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வந்தார்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகி ருஷ்ணன் தலைமையிலான போலீசார் மேட்டுப்பாளையம்-காரமடை செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் புதுக்கோட்டை கடையாத்திப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இயேசு ராஜன்(20), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்்ந்த கோகுல் சாந்த்(18) என்பது தெரியவந்தது.
இவர்கள் தான் ஐ.டி.ஊழியர் அருண்பிரசாத்தின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.