உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் 12,969 பிளஸ்-1 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்கள் தயாா் ெசய்யும் பணி தீவிரம்

Published On 2022-07-08 09:49 GMT   |   Update On 2022-07-08 09:49 GMT
  • கடந்த ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து சைக்கிள்கள் வாங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மற்றொரு நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
  • நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 12,969 சைக்கிள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

நாமக்கல்:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ்- 1 மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அரசு சாா்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக மாணவா்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், 2021-22 ம் ஆண்டுக்கு சைக்கிள்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து சைக்கிள்கள் வாங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மற்றொரு நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன.

உதிரிபாகங்களை இணைத்து சைக்கிள்கள் தயாா் செய்யும் பணியில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 12,969 சைக்கிள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

கடந்த ஆட்சியில் பச்சை வண்ணத்தில் இருந்த சைக்கிள்கள் தற்போது நீல வண்ணத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்-அமைச்சர், சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவுடன், நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் வாரியாக மாணவா்களுக்கு வழங்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News