உள்ளூர் செய்திகள்

பச்சிளம் குழந்தை சாவு; நாகை அரசு ஆஸ்பத்திரி முற்றுகை

Published On 2022-12-12 12:57 IST   |   Update On 2022-12-12 12:57:00 IST
  • நள்ளிரவு 12 மணி அளவில் அவசரமாக அறுவை சிகிச்சை.
  • மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பன்னால் கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவரது மனைவி திருமுகப்பிரியா.

இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் தலை பிரசவத்திற்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குழந்தைக்கு தொப்புள் கொடி சுத்தி இருப்பதால் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு திருமுகப்பிரியாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு பணிக்குடம் உடைந்துள்ளது. நள்ளிரவு 12 மணி அளவில் திருமுகப்பிரியாவிற்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவ ர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக கூறி நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்து வமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்து குழந்தையின் தந்தை வீரசேகரன் வெளிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பிரசவத்தின் போது குழந்தை இறந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News