உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவைகுண்டத்தில் ஊருக்குள் வராத தனியார் பஸ் சிறைபிடிப்பு- பொதுமக்கள் போராட்டம்

Published On 2024-01-29 04:15 GMT   |   Update On 2024-01-29 04:15 GMT
  • பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
  • போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மிக முக்கிய பகுதியாகும். இங்கு நவ திருப்பதி தலங்களில் முதல் தலமாக விளங்கும் கள்ளபிரான் கோவில், நவகைலாயங்களில் 5-வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவில் என மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்கள் அதிக அளவில் உள்ளது.

தினந்தோறும் ஸ்ரீவை குண்டம் பகுதிக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பல்வேறு தனியார் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள புதுக்குடி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

இதனால் பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பலமுறை காவல்துறையினர் மற்றும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடமும் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி இரவு வந்த தனியார் பஸ் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் மெயின் ரோட்டில் சென்றது. பஸ்சில் இருந்த ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் இறங்க வேண்டிய பயணிகளை மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்ல முயன்றது.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் தனியார் பஸ்சை சிறை பிடித்து நெல்லை- திருச்செந்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவை குண்டம் போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தனியார் பஸ்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News