உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய உழவர் சந்தை

Published On 2022-09-08 09:58 GMT   |   Update On 2022-09-08 09:58 GMT
  • அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.
  • வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.

அரவேணு,

கோத்தகிரி கடைவீதி பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு அலுவலகம், கடைகள், கழிப்பிட வசதி, வாகனம் நிறுத்துமிடம், பாதுகாப்பு சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உழவர் சந்தை அமைக்கப்பட்டது.

இந்த உழவர் சந்தை வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் பஸ்கள் அந்த வழியாக இயக்கப்படாததாலும், விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதாலும் உழவர் சந்தை சில மாதங்களில் செயலிழந்தது. பின்னர் பல முறை வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் உழவர் சந்தையை திறக்க முயற்சி மேற்கொண்டும், விவசாயிகள் போதிய ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் உழவர் சந்தை மூடப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் மார்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் சுமார் 50 கடைகளை அகற்றி புதியதாக உழவர் சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பேரூராட்சிக்கு கிடைத்து வரும் வருவாயும் பாதிக்கப்படும். எனவே பழைய உழவர் சந்தையை புதுப்பிக்கவோ அல்லது மாற்று இடத்தில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் பழங்குடியின மக்களும் இங்கு உழவர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சரிடம், கடை இழந்து பாதிப்புக்கு ள்ளாகும் வியாபாரிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வேறு பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் எனத் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோத்தகிரி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்க ளிடம், வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படும் என உறுதி அளித்து விட்டு, இது குறித்து அதிகாரிகளிடம் விரிவான ஆலோசனை செய்வதற்காக கோத்தகிரி பேரூராட்சி விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். 

Tags:    

Similar News