ஓசூர் சப்-டிவிஷனில் இந்த ஆண்டில் இதுவரை கஞ்சா விற்ற 52 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் -ஏ.எஸ்.பி. பேட்டி
- 52 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- கஞ்சா விற்பனை செய்தவர்களின் 44 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ஓசூர்,
ஓசூர் ஏ.எஸ்.பி. பி.கே. அர்விந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் டாகுர் உத்தரவில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஓசூர் சப்-டிவிஷனில், எனது தலைமையில் சப்-டிவிஷன் போலீஸ் நிலையங்களில் உள்ள 6 இன்ஸ்பெக்டர்களுடன் இந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, கஞ்சா விற்ற நபர்கள் மீது 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 வாகனங்கள், 65 கிலோ கஞ்சா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களின் 44 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த ஒரு குற்றவாளி மீது மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இனி வரும் காலங்களில், ஓசூர் சப்-டிவிஷனில் யாருக்கேனும் கஞ்சா விற்பனை செய்வது அல்லது கடத்துவது பற்றி தெரிய வந்தால் 24 மணி நேரமும், போலீசாருக்கு 9498234567 என்ற போன் எண் மூலம் அல்லது வாட்ஸ்அப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம், ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.