கோவையில் கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
- கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது.
- கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று அதிகாலையில் கோவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு போயிருப்பதை கோவில் பாதுகாவலர் ஒருவர் பார்த்தார்.
நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலில் ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.