உள்ளூர் செய்திகள்

பசுமை திட்டத்தின் கீழ் மலைரெயிலை இயக்க ஹைட்ரஜன் என்ஜின்

Published On 2023-08-24 14:43 IST   |   Update On 2023-08-24 14:43:00 IST
  • 8 பகுதிகளில் உள்ள 35 ரெயில்களை ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
  • விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

ஊட்டி,

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணிக்க அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இது மேட்டுப்பாளையம்-குன்னுாா் இடையே, 'மீட்டா் கேஜ்' பாதையில் 15 கி.மீ. வேகத்துக்கும் குறைவாக 'எக்ஸ் கிளாஸ்' இன்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.

மலை ரெயிலில் பயணிப்போா் இயற்கை காட்சிகளை கண்குளிர ரசித்து செல்ல முடியும். இது டீசல், பா்னஸ் ஆயில் எரிபொருட்கள் உதவியுடன் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 8 பகுதிகளில் உள்ள 35 ரெயில்களை ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன்ஒருபதியாக ஊட்டி - மேட்டுப்பாளையம், டாா்ஜ்லிங் -இமாச்சல பிரதேசம் உள்பட 8 பாரம்பரிய ரெயில்களை, பசுமை ரெயில் திட்டத்தின் கீழ் இயக்குவது என்று மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

அதன்படி நீலகிரி மலைப்பாதையில் ரூ.80 கோடி மதிப்பில் ஹைட்ரஜனில் இயங்கும் இன்ஜினை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இதற்கான பணிகள் விரைவில் முடிந்து, மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நீலகிரி மலை ரெயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.

Tags:    

Similar News