வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறந்த ஓசூர் ரோஜாக்கள்
- காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜா தான்.
- ஓசூரில் இந்த ஆண்டு தாஜ்மகால் பூக்கள் அதிகம் விற்பனையானது.
ஒசூர்,
உலகம் முழுவதும் இன்று காதலர்தினத்தை இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடினர். காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜா தான்.
ரோஜா பலர்கள் உற்பத்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமை கூடில்கள் அமைத்து ரோஜா மலர் சாகுபடி செய்துவரும் விவசாயிகள், அதிக அளவில் காதலர் தினத்திற்காக ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூரை ஒட்டியுள்ள பகுதி என்பதால் ஓசூரில் நிலவும் தட்பவெப்ப நிலை ரோஜா பயிரிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.
ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் 1500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா பயிரிடப்பட்டு உள்ளன. ரோஜா பயிரிடுதல், மலர் பறித்தல், பராமரிப்பு, கொள்முதல் என பல்வேறு பிரிவுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் ரோஜா சாகுபடி உருவெடுத்துள்ளது.
தாஜ்மஹால், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், கார்வெட் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் ஓசூரில் பயிரிடப்படுகின்றன. எனினும் தாஜ்மஹால் என்று சொல்லக்கூடிய 15 முதல் 30 சென்டி மீட்டர் நீலமுள்ள சிவப்பு ரோஜாக்களுக்கு சந்தையில் தனிமதிப்பு உள்ளதால் விவசாயிகள் சிவப்பு ரோஜாக்களையே அதிகம் சாகுபடி செய்வார்கள்.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் ஆகிய விழாக்களின்போது ஓசூர் ரோஜா மலர்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பும், சந்தை வாய்ப்பும் இருந்து வருகிறது.
இன்று காதலர் தினத்துக்காக ஓசூரில் இருந்து பல நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் ஆஸ்திரேலியா, குவைத், துபாய், பிரான்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் ஓசூர் ரோஜாக்கள் ஏற்றுமதி ஆயின.
இதில் தாஜ்மஹால், அவலாஞ்சி ஆகிய பூக்கள் சிங்கபூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரசு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிகளவில் ரோஜா மலர்களை விவசாயிகள் அனுப்பினர். மும்பை வழியாக மட்டும் இந்த ஆண்டு 158 டன் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின.
கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் காதலர் தினத்திற்காக உற்பத்தி செய்யப்பட்ட ரோஜா பூக்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். பின்பு கடந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளால் காதலர் தினத்தை குறிவைத்து விவாசயிகள் ரோஜா மலர்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் மேற்கொண்டனர்.
ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிக அளவு மலர் உற்பத்தி ஆகியது. கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி முதலே காதலர் தினத்திற்கான ரோஜா மலர் ஏற்றுமதி தொடங்கியது.
தமிழகம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முகூர்த்தங்களும், சுப நிகழ்ச்சிகளும் அதிகமாக உள்ளதால் உள்ளூர் சந்தைகளிலும் மலர்களுக்கு நல்ல விலை கிடைத்து வருவதாக கொய்மலர் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கேரளா, மும்பை, டெல்லி, ஆந்திரா உள்பட இந்தியா முழுவதும்நேற்றுவரை ஓசூரில் இருந்து 1 கோடிக்கு மேல் ரோஜா மலர்கள் விற்பனை ஆயின. கொரோனாவுக்கு முன்பு 20 ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கட்டு 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது கடந்த 10-ந்தேதி அன்று ஒரு கட்டு 400 வரை விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கட்டு 200-க்கு விற்பனையானது. ஓசூரில் இந்த ஆண்டு தாஜ்மகால் பூக்கள் அதிகம் விற்பனையானது.
என்றனர்.