உள்ளூர் செய்திகள்

பர்கூரில் கனமழை: முக்கிய வீதிகளில் 2 அடி உயரத்திற்கு தேங்கிய தண்ணீர் -பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2022-10-19 14:54 IST   |   Update On 2022-10-19 14:54:00 IST
  • தண்ணீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
  • மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பெய்த கன மழையால், முக்கிய வீதிகளில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் 2 மணி முதல் 3.15 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானம், பஸ் நிலையம், ஐ.இ.எல்.சி. குன்றியோருக்கான பள்ளி, திருப்பத்தூர் சாலை, வாணியம்பாடி சாலை, பூ மாலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் மழை நீர் தேங்கியது.

நேற்று பர்கூர் பஸ் நிலையம் அருகே வாரச்சந்த்தைக்காக சாலை யோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் கடையில் உள்ள பொருட்களும் மழையில் நனைந்து வீணாகின. இதே போல், 70 மாணவர்கள் படிக்கும் ஐஇஎல்சி மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி வளாகத்தில் இரண்டு அடிக்கு மழை நீர் தேங்கியது.

நேற்று மாலை 5 மணிவரை நீர் வடியவில்லை. நகரின் முக்கிய வீதிகளில் தேங்கிய நீரால் போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே இப்பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்து, மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News