தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை
- பகல் முழுவதும் வெயில் கொளுத்தியதால் இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்தது.
- ஒரே நாளில் 450.30 மி.மீ. மழை அளவு பதிவானது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே கோடை காலம் போல் வெயில் சுட்டெரித்து வந்தது. பகல் முழுவதும் வெயில் கொளுத்தியதால் இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக கும்பகோணம், திருவிடைமருதூர், கீழணை, வெட்டிக்காடு, தஞ்சாவூர், வல்லம், குருங்குளம் உள்பட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இரவு முழுவதும் மலைக் கொட்டியது.
கும்பகோணத்தில் பெய்த கன மழையால் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சியளித்தது. பஸ்கள் நிற்கும் இடம் முழுவதும் தண்ணீர் தேங்கி காணப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த கன மழையால் ஒரே நாளில் 450.30 மி.மீ. மழை அளவு பதிவானது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு:-
கீழணை -73.40, வெட்டிக்காடு -69.20, கும்பகோணம் -66, திருவிடைமருதூர் -62, குருங்குளம் -32.50, ஒரத்தநாடு -25.60, தஞ்சாவூர் -13, வல்லம் -13.