உள்ளூர் செய்திகள்

அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் -தருமபுரி கலெக்டர் சாந்தி தகவல்

Published On 2022-12-13 10:13 GMT   |   Update On 2022-12-13 10:13 GMT
  • நேரடி சேர்க்கை 1-ந்தேதி தொடங்கி வரும் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
  • மாதாந்திர உதவித் தொகை ரூ.750/- மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

அரூர் அருகே உள்ள ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை 1-ந்தேதி தொடங்கி வரும் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

வயர்மேன் பிரிவுக்கு 8-ம் வகுப்பிலும், ரெப்ரிஜிரேசன் - ஏ.சி. டெக்னீசியன், பிட்டர், மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி சேர்க்கைக்கு வரும்பொழுது கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, மாற்றுசான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்றிதழ் ஆகியன அசல் சான்றிதழ்களுடன் கொண்டு வரவேண்டும்.

விண்ணப்ப கட்டணம் மற்றும் இதரக்கட்டணம் ரூ.245/- ஆகும். பயிற்சி கட்டணம் இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைப்பட கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித் தொகை ரூ.750/- மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும்.

மேலும் பயிற்சி முடித்த பின் வளாகத் தேர்வு மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்று தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியும் வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக்கல்லூரி வளாகத்தில் இயங்கிவரும் அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை நேரிலோ அல்லது 94434 70656, 94438 23985 மற்றும் 75488 44547 ஆகிய கைபேசி மூலமாகவோ தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News