பள்ளி மாணவியிடம் அத்துமீறல்- டிரைவர் போக்சோவில் கைது
- செம்பனார்கோவில் பகுதியில் சென்றபோது மாணவியை திடீரென பிரபு வழிமறித்தார்.
- அதிர்ச்சியடைந்த அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் கீழையூர்-உப்பு நகரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் பிரபு(வயது 29). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர், 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அந்த மாணவி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். செம்பனார்கோவில் பகுதியில் சென்றபோது மாணவியை திடீரென பிரபு வழிமறித்தார். பின்னர் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
மேலும் இதனை வெளியில் சொன்னால் சரக்கு ஆட்டோவை ஏற்றி கொலை செய்து விடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.