உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் ரோஜா பூங்காவை சுற்றிப்பார்த்த கவர்னர்- பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் கலந்துரையாடினார்

Published On 2023-05-15 05:39 GMT   |   Update On 2023-05-15 05:39 GMT
  • கவர்னர் ரவி கொடைக்கானல் வானியல் ஆய்வு மையத்துக்கு சென்று பார்வையிட்டார்.
  • கொடைக்கானலில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கொடைக்கானல்:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கொடைக்கானல் வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த அவர் பின்னர் கொடைக்கானலுக்கு கார் மூலம் மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார்.

குறிஞ்சி ஆண்டவர் கோவில் செல்லும் வழியில் உள்ள கோகினூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் விசாகன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் திலிப் உள்ளிட்ட அதிகாரிகள் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின் கார் மூலம் அப்சர்வேட்டரி சாலை வழியாக அப்பர்லேக் வியூ, பாம்பார்புரம் ஆகிய இடங்களுக்கு சென்றார்.

சுற்றுலா வழித்தடத்தில் கவர்னரின் கார் சென்றதால் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். அதன்பின் கோக்கர்ஸ் வாக் வழியாக பயணித்த கவர்னர் மீண்டும் ஏரிச்சாலையை சுற்றி வாகனத்தில் இருந்து எங்கும் இறங்காமல் பார்வையிட்டனர். அதன்பின் கோகினூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றடைந்தார்.

கவர்னர் வருகையால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் வழித்தட மாற்றத்தால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். கவர்னர் வாகனம் சென்ற பிறகு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

இன்று காலை கவர்னர் ரவி தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் ரோஜா பூங்காவுக்கு வருகை தந்தார். அங்கு பூத்துக்குலுங்கும் பல்வேறு வகையான ரோஜா மலர்களை கண்டு பரவசமடைந்தார். அதனைத்தொடர்ந்து கொடைக்கானல் வானியல் ஆய்வு மையத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி புதிய வேளாண் எந்திர பயன்பாடு குறித்தும் கேட்டறிந்து அதன் செயல்முறை விளக்கம் ஆற்ற உள்ளார்.

கவர்னர் வருகையை முன்னிட்டு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கொடைக்கானலில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று கொடைக்கானலில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தனது சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கார் மூலம் மதுரைக்கு சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

முன்னதாக கொடைக்கானலுக்கு வருகை தந்த கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து வத்தலக்குண்டுவில் கருப்பு பலூன்களை பறக்க விட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட குவிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் திராவிடர் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் மருத மூர்த்தி தலைமையில் அந்த அமைப்பினர் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். கொடைக்கானலிலும் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Tags:    

Similar News