உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி, கல்லூரி விடுதிகளில் சிறப்பாக செயல்பட்ட காப்பாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்

Update: 2022-11-29 10:15 GMT
  • மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
  • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 340 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மின்சார வசதி, சாலை வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 340 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் 2021-2022 ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடம் பிடித்த அஞ்செட்டி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி காப்பாளர் முருகனுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடித்த பர்கூர் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி காப்பாளினி சந்திராவிற்கு ரூ.5 ஆயிரம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் மூன்றாம் இடம் பிடித்த போச்சம்பள்ளி அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவிகள் விடுதி காப்பாளினி லட்சுமிக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பில் பரிசுத்தொகை என மொத்தம் 3 காப்பாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை, விருது, கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

Tags:    

Similar News