ஊட்டி மார்க்கெட் பகுதியில் குவியும் குப்பைகள்
- குப்பைகளை சேகரிக்கும் பணியில் 123 நிரந்தரப் பணியாளா்கள், 163 ஒப்பந்தப் பணியாளா்கள் ஈடுபட்டு வந்தனா்.
- கடந்த 31ம் தேதியுடன் தற்காலிக துப்புரவுப் பணியாளா்களுக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களால் தினசரி சுமாா் 32 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை சேகரிக்கும் பணியில் 123 நிரந்தரப் பணியாளா்கள், 163 ஒப்பந்தப் பணியாளா்கள் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில் கடந்த 31ம் தேதியுடன் தற்காலிக துப்புரவுப் பணியாளா்களுக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது. இதனால், நிரந்தரப் பணியாளா்களை கொண்டு சுகாதாரத் துறையினா் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். ஆனாலும், நகரில் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.
தற்போது மழையும் பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாக உள்ளது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வழக்கமாக ஒப்பந்தப் பணியாளா்களின் பணிக் காலம் முடிந்தவுடன், அவா்களது ஒப்பந்தம் தனியாா் ஒப்பந்ததாரா்கள் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படும்.
ஆனால், தற்போது நிரந்தர தூய்மைப் பணியாளா்களை அலுவலக பணிகளுக்கு மாற்றம் செய்துவிட்டு மொத்தமாக இருக்கும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியிடங்களை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, இந்தப் பணிகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிய 2 மாதம் ஆகும் என தெரிகிறது என்றனர்.